2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் திருடப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஒன்று கராச்சி துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் காவல்துறையின் உதவியை இன்டர்போல் நாடியுள்ளது.
MK70 OKW என்ற பதிவு எண்ணைக் கொண்ட இந்த கருப்பு ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார், 2022 நவம்பர் மாதம் வடக்கு யார்க்ஷயரின் ஹரோகேட் நகரத்தில் திருடப்பட்டது.
சம்பந்தப்பட்ட SUV காரின் டெலிமாடிக்ஸ் அமைப்பு, திருடப்பட்ட இடத்திலிருந்து சுமார் 6,800 கி.மீ தூரத்தில் உள்ள கராச்சியின் சதர் பகுதியில் பிப்ரவரி மாதத்தில் கார் இருப்பதைக் காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் தேசிய மத்திய இன்டர்போல் பணியகம், இங்கிலாந்து அதிகாரிகள் திருடப்பட்ட காரை கண்டுபிடித்து மீட்க உதவுமாறு உள்ளூர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கராச்சி காவல்துறையின் வாகனத் திருட்டு தடுப்புப் பிரிவின் தலைவர் அம்ஜத் அஹ்மத் ஷேக் கூறுகையில், “இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட வாகனத்தை மீட்பதில் உதவி கோரி இன்டர்போலிடமிருந்து எங்களுக்குக் கடிதம் வந்துள்ளது. 2022-ல் திருடப்பட்ட இந்த வாகனத்தின் இருப்பிடம் பிப்ரவரி மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், தற்போதைய இருப்பிடத்தை எங்களுக்குத் தெரிவிக்குமாறு அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். புதிய இருப்பிடம் கிடைத்தவுடன், நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனம் மீட்கப்படும்” என்றார்.
வாகனத்தின் அசல் உரிமையாளர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. ரேஞ்ச் ரோவர் கார் உலக இன்டர்போல் தரவுத்தளத்தில் திருடப்பட்டதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கார் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மான்செஸ்டரில் உள்ள இன்டர்போல் அதிகாரிகள் கடந்த மாதம் பாகிஸ்தான் இன்டர்போலைத் தொடர்பு கொண்டனர்.
இங்கிலாந்தில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து திருடப்பட்ட சுமார் 200,000 பவுண்டுகள் மதிப்புள்ள பென்ட்லி முல்சேன் கார் கராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில், கராச்சியில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த கார் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் துணியால் மூடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. காரில் பாகிஸ்தானிய பதிவு எண்கள் இருந்தன, அவற்றில் சில போலியானவை மற்றும் கையால் செய்யப்பட்டவை. ஆனால், செசி எண் திருடப்பட்ட காரின் பதிவுகளுடன் ஒத்துப்போனது.