சனி அன்று ஒரே படகில் 125 புலம்பெயர்ந்தோர் பிரிட்டன் வருகை

சமீபத்திய தகவல்களின்படி, ஒரே படகில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கால்வாய் நீரிணையைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைந்த சம்பவம் சனிக்கிழமையன்று பதிவாகியுள்ளது.

PA செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, பிரான்சில் இருந்து ஒரே படகில் 125 பேர் பிரிட்டனுக்கு வந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் பதிவான சாதனையை இது முறியடித்துள்ளது. அப்போது 106 புலம்பெயர்ந்தோர் “மெகா டிங்கி” என்று ஊடகங்களால் அழைக்கப்பட்ட ஒரு பெரிய படகில் பிரிட்டனுக்குள் நுழைந்தனர்.

உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் கூறுகையில், “சிறு படகுகளில் மக்கள் கடந்து வருவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு காரணமான கொடிய கடத்தல்காரர்கள் நமது எல்லைகளில் குழப்பத்தை விளைவிக்கிறார்கள்.

பிரான்சுடனான ஒப்பந்தத்தின் மூலம், சிறு படகுகளில் வருபவர்களை தடுத்து வைக்க முடியும். மேலும், அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.

உள்துறைச் செயலாளராக, இங்கிலாந்து எல்லையைப் பாதுகாப்பதே எனது முன்னுரிமை. நமது குடிவரவு முறையை ஒழுங்குபடுத்த அனைத்து வழிகளையும் ஆராய்வேன்.” என்றார்.

பிரிட்டன் அரசாங்கத்தின் “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” என்ற ஒப்பந்தத்தின் கீழ் பலர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறு படகுகளில் சட்டவிரோதமாக மக்களை கடத்தும் கும்பலை ஒழித்துக்கட்டவும், ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை 33,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் சிறு படகுகள் மூலம் பிரிட்டனுக்கு வந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் கால்வாய் கடப்புகளைப் பற்றிய தரவுகள் முதன்முதலில் வெளியானதிலிருந்து, இந்த ஆண்டின் இதுவரையிலான காலகட்டத்தில் இதுவே அதிகபட்சமாகும்.

சனிக்கிழமையன்று 12 படகுகளில் 895 பேர் பிரிட்டனை வந்தடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *