பிரிட்டனுக்குள் நுழைவதற்காக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவரைத் திருமணம் செய்த பெண் ஒருவர், அந்த நபர் தன்னை ஏமாற்றிய கதையை வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பெண், பிரிட்டனுக்குப் புதிதாக வந்த அந்த நபரிடம் இரக்கம் காட்டி, வேறு வழியில்லாமல் அவரைத் திருமணம் செய்துள்ளார். ஆப்கானிஸ்தான், பிரிட்டனில் தஞ்சம் கோர விரும்பும் அகதிகள் வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.
அமிலியா மற்றும் ஜாவத் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) கென்ட் நகரில் சந்தித்தனர். ஜாவத்துக்கு உடைகள் வாங்கிக் கொடுத்ததுடன், ஆங்கிலம் கற்கவும், புகலிடம் கோருவதற்கான விண்ணப்பத்திற்கு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து உதவினார் அமிலியா. ஆரம்பத்தில் ஜாவத் மிகவும் அன்பாக இருந்தார் என்றும், அவருக்காக பூக்கள் கொண்டுவர மழையில் கூட சைக்கிளில் வருவார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உறவு திருமணத்தில் முடிந்தது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் போகப்போக ஜாவத்தின் நடத்தை மாறியது. அவர் கொடுமைக்காரனாகவும், கட்டுப்படுத்தும் நபராகவும் மாறினார்.
கடந்த வருடம் ஜாவத்தின் புகலிடக் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அவரை விவாகரத்து செய்த அமிலியா, தற்போது தனிமையில் வாடுவதாகக் கூறுகிறார். ஜாவத், இதற்கு முன்பு பலமுறை நிராகரிக்கப்பட்ட தனது புகலிடக் கோரிக்கையை ஏற்கச் செய்ய, அவர்களின் குழந்தையைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும், ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப பயப்படுவதாகக் கூறினாலும், பலமுறை அங்கு சென்று வந்துள்ளார் என்றும், அங்கே வேறொரு திருமணம் கூட செய்து கொண்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
இதுகுறித்து அமிலியா உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. புகலிடம் கோரியபோது அளித்த வாக்குறுதிக்கு மாறாக ஜாவத் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். உள்துறை அமைச்சகமும், நீதித்துறையும் தன்னைக் கைவிட்டுவிட்டதாக அவர் வேதனையுடன் கூறுகிறார்.
அமிலியா தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்தார். ஜாவத் தன்னையும், குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், கர்ப்பமாக இருந்தபோது கத்தியை தன் கழுத்தில் வைத்ததாகவும் கூறினார். ஒருமுறை அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஜன்னல் அருகே நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார். “அவர் என்னை தூக்கத்திலேயே கொன்றிருக்கலாம். நான் தற்காத்துக்கொள்ளக்கூட நேரம் கிடைத்திருக்காது” என்று அவர் கூறினார். “யோசித்துப் பார்த்தால், எங்கள் உறவு, திருமணம், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாமே பிரிட்டனில் தங்குவதற்கான திட்டமாக இருந்தது இப்போது புரிகிறது” என்றார்.
ஜாவத் தன்னை பின்தொடர்ந்தார், எங்கு சென்றாலும் கண்காணித்தார், மற்ற ஆண்களுடனோ, நண்பர்களுடனோ பேசக்கூடாது என்று கட்டுப்படுத்தினார் என்றும் அமிலியா கூறினார். தினமும் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டுவார் என்றும் தெரிவித்தார்.
2019 முதல் பிரிட்டனில் சுமார் 6,000 ஆப்கானிஸ்தான் அகதிகள், பிரிட்டன் பெண்களை திருமணம் செய்துள்ளனர். அவர்களில் சிலர் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், அமிலியாவின் கதை ஒரு சிலர் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அகதி ஒருவருக்கு பிரிட்டனில் குழந்தை பிறந்தால், அவரை நாடு கடத்துவது அதிகாரிகளுக்கு கடினமாகிவிடும்.
ஜாவத் மிகவும் தந்திரமாக செயல்பட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை உணரவில்லை என்று அமிலியா கூறினார். “இப்போது எல்லாமே முடிந்துவிட்டது. நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். இனி பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. என் மகளுக்கு இயல்பான குழந்தைப்பருவம் கிடைக்கவில்லை. எங்கள் வாழ்க்கை நாசமானது. அவனுக்கு இது ஒரு சின்ன விஷயமாக இருக்கலாம்” என்றார்.
ஜாவத் தனக்கும், தன் குழந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தும், அவர்கள் புகலிடம் வழங்கியது ஏன் என்று அமிலியா கேள்வி எழுப்புகிறார். அவர் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேட்கிறார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நாங்கள் தனிப்பட்ட வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம். ஆனால், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
நீதித்துறையைப் பொறுத்தவரை, ஜாவத் தனது சகோதரன் மகனுக்கு, அமிலியாவின் குழந்தையை திருமணம் செய்து கொடுக்க கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க குடும்ப நீதிமன்றம் தவறிவிட்டது. ஆனால், உடல் ரீதியான தாக்குதல், பாலியல் வன்கொடுமை, வீட்டையும் குழந்தையையும் எரித்துவிடுவதாக மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஜாவத் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர் பிரிட்டனில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் ஆப்கானிஸ்தானில் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அமிலியா மன அழுத்தத்தில் இருக்கிறார். “அவர் எனக்குச் செய்த கொடுமை என்னைக் கொன்றதை விட மோசமானது. என் வாழ்க்கை நாசமானது. இனி ஒரு உறவு வைத்துக்கொள்ள முடியாது. வேலை செய்ய முடியாது. பல வருடங்களாக நான் தெருவில் நடக்கவில்லை. தலைமறைவாக வாழ்கிறேன்” என்று கண்ணீருடன் கூறுகிறார்.

