ஐரோப்பிய ஒன்றியத்தின் நுழைவு-வெளியேறும் திட்டம் (Entry-Exit System – EES) அக்டோபர் 12 முதல் தொடங்குகிறது. இது, பிரிட்டன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற மூன்றாம் நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும். இது தொடர்பாகப் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், முக்கியமான தகவல்களைத் தொகுத்து இங்கே வழங்குகிறோம்:
EES என்றால் என்ன?
ஷெங்கன் பகுதிக்குள் (அயர்லாந்து, சைப்ரஸ் தவிர்த்து அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், ஐஸ்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து) நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து எல்லைகளையும் ஒரு மையத் தரவுத்தளத்துடன் இணைக்கும் ஒரு அமைப்பு இது. குற்றங்களைத் தடுப்பதும், 180 நாட்களுக்குள் 90 நாட்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்கும் கட்டுப்பாட்டை உறுதி செய்வதும் இதன் முக்கிய நோக்கம்.
செயல்முறை எப்படி இருக்கும்?
ஷெங்கன் எல்லைக்குள் முதன்முறையாக நுழையும்போது, அனைத்து மூன்றாம் நாட்டு குடிமக்களின் Biometrics எனப்படும் கைரேகை மற்றும் முகம் ஆகியவை சேகரிக்கப்படும் அல்லது சரிபார்க்கப்படும். சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சாலை எல்லைகள் உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும். முதல் முறை வரும்போது, பயணியின் முகம், கைரேகை மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை பதிவு தேவையில்லை. அடுத்த முறை ஷெங்கன் எல்லைக்குள் நுழையும்போது, முகம் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
பதிவு செய்வது எப்படி?
பெரும்பாலான பயணிகள் எல்லைகளில் உள்ள Kiosks எனப்படும் தானியங்கி பதிவு நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டின் புகைப்படப் பக்கத்தை Kiosks இயந்திரத்தில் வைத்து, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும். மீண்டும் வரும்போது, கியோஸ்க் இயந்திரத்தைப் பயன்படுத்தி உங்கள் முகம் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களை உறுதிப்படுத்தலாம். சில எல்லைப் பகுதிகளில், எல்லைக் காவலர் உங்கள் பயோமெட்ரிக் சரிபார்ப்புகளைச் செய்யக் கேட்கலாம்.
எப்போது நடைமுறைக்கு வரும்?
EES திட்டம் அக்டோபர் 12, 2025 முதல் ஏப்ரல் 9, 2026 வரை படிப்படியாக அமல்படுத்தப்படும். ஜெர்மனி நாட்டில் உள்ள டூசல்டார்ஃப் விமான நிலையத்திலும், ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் விமான நிலையத்தில் ஒரு விமானத்திலும் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படவுள்ளது. ஸ்பெயின் நாட்டில் விமான நிலையங்கள், தரைவழி எல்லைகள் மற்றும் கடல்வழி எல்லைகள் என அனைத்து எல்லைகளிலும் படிப்படியாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசு, எஸ்டோனியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் முதல் நாளிலிருந்தே இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தயாராக உள்ளன.
முன்னதாக தயார் செய்ய வேண்டுமா?
இல்லை. இது, எல்லைகளில் மேற்கொள்ளப்படும் கூடுதல் சரிபார்ப்பு நடைமுறை மட்டுமே. முதல் ஆறு மாதங்களுக்கு, பழைய முறைப்படி பாஸ்போர்ட் சரிபார்த்து முத்திரையிடும் நடைமுறை தொடரும். அதே நேரத்தில், பயோமெட்ரிக்ஸ் தரவும் கேட்கப்படலாம். மேலும், ஒரு வருடம் கழித்து, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன் Etias “யூரோ விசா” பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு என்ன நடக்கும்?
ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சிறப்பு பாதைகள் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் மற்றும் அவர்களுடையது தானா என்பதை மட்டும் அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.
டிஜிட்டல் பதிவு எவ்வளவு காலம் வரை இருக்கும்?
EES அமைப்புடன் ஒருமுறை தொடர்பு கொண்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் சேமிக்கப்படும். ஒவ்வொரு புதிய வருகையும் பதிவின் செல்லுபடியாகும் காலத்தை மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கும். ஒருவேளை, நீங்கள் மூன்று வருடங்களுக்குள் ஷெங்கன் பகுதிக்கு வரவில்லை என்றால், மீண்டும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். பாஸ்போர்ட் புதுப்பித்தால், கணினி தானாகவே புதுப்பிக்கப்படும்.
பயணக் காப்பீடு (Travel Insurance) தேவையா?
பயணக் காப்பீடு கட்டாயமில்லை. இருப்பினும், பயணக் காப்பீடு வைத்திருப்பது பாதுகாப்பானது.
குரூஸ் (Cruise) பயணங்களில் என்ன நடக்கும்?
குரூஸ் பயணம் இங்கிலாந்தில் தொடங்கி அங்கேயே முடிந்தால், EES தேவையில்லை. ஷெங்கன் பகுதிக்கு வெளியே பயணம் தொடங்கி முடிந்தால் EES தேவையில்லை. ஆனால், ஷெங்கன் பகுதியில் கப்பலில் ஏறினாலோ அல்லது இறங்கினாலோ, EES நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

